Tuesday 27 May 2014

மெய்யாய் ஒரு பொய்.



சிற்றின்பக் கனவோடு சிந்தைதடு மாறிதினஞ்
           சிதைந்தின்பம் வேண்டு வேனோ?
     சிதறுமனம் அலையுலகைச் சதமென்று நினையாது
           சிந்திக்கத் தூண்டு வேனோ?
புற்றன்ன சதைக்கூட்டைப் புலனென்னும் பாம்பிற்கு
           விற்றுவுளம் வாடு வேனோ?
     புலராப்பொய்ப் புகைமாய்க்கப் புன்காட்டை இடமாக்கிப்
           புத்தியினைத் தேடு வேனோ?
கற்றுள்ளந் தெளியாமல் காய்ந்துலையும் அறிவிற்குக்
           கண்ணியங் காட்டு வேனோ?
      காற்றிலலை சருகாகிக் காட்டில்நிலை யாக்கையுள
           கற்பனைகள் ஓட்டு வேனோ?
பற்றென்னும் படகேறிப் பார்நிலம் பயணிக்கப்
           பரகதிக்கு வழியு முண்டோ?
      பித்தென்றிவ் வுலகம்பொய்ச் சித்தென்று தெளிந்தாற்பின்
           பிறவித்தீ அணையு மன்றோ?


கருக்கேணி தனில்நின்று காமமெனுங் கயிற்றினால்
           காசினி பட்ட தேகம்!
     கழிவாகும் பொருள்தேடிக் கானலைக் கைப்பற்றும்
             கதிகாணா துற்ற மோகம்!
மருட்கேணி மூழ்கியொரு முத்தெங்கும் இலையென்று
             மயங்கிநான் கொண்ட போகம்,
    மாளாது எனவெண்ணி மீன்தன்னைக் கரையிட்ட
             மடமையைக் கொண்ட தாகும்!
உருப்பெற்றேன் உணர்வில்லா துலர்கல்லாய் வந்தேனேல்
             உண்மையில் தொல்லை போகும்!
     உதவாத அறிவோடு உயிருள்ள பிணம்போல்நான்
             உலவுவேன் இல்லை யோகம்!
விருப்பற்ற வாழ்விற்குத் திருப்பெற்றேன் இல்லைநான்
             விட்டகலா தண்டுந் தாகம்,
      வெறுப்புற்று மெய்ஞான வழிதேடிக் காணாமல்
             வேதனை கொண்டு சாகும்!

மண்டுமறி யாமையெனைக் கொண்டுழச் செய்தவனும்
             மாயையோ மதியி னொளியோ?
     மருள்நீக்கி மயங்குயிரின் இருள்நீக்கி மனக்கோயில்
             மறைந்துறையும் விதியி னளியொ?
கண்டுலவு காட்சிதொலை அண்டமெலா மாக்கிநமை
            காப்பதவன் கொண்ட அருளோ?
     காணாத கருத்தாக்கிக் கரையில்லாக் கடலாகிக்
            கரைப்பதவன் கண்ட பொருளோ?
நண்டுவளை போலவுள நானிலமே நாம்காணா
            நல்லுலகம் இன்னு முளவோ?
     நரைமூட நமன்தேட இறைநாடும் நெஞ்சத்தில்
            நலம்நல்கும் உண்மை களவோ?
உண்டுலவி உலகின்பம் உடல்துய்ப்ப தல்லாது
            உருப்படியாய்ச் செய்த தெதுவோ?
     உண்மையறிந் ததன்பின்னும் நன்மைதனை நாடாது
           உழல்வதுவிவ் வுலகப் பொதுவோ?

பிள்ளையெனத் தாய்தந்தை பின்னாடி அதுமாறிப்
           பிணைநண்ப ரோடு வாடிப்
     பிழையாடி உயிர்வாடக் கழையாடி யினைப்போல
           பெருங்காத லோடு வாடிக்
கள்ளைநிகர்ப் பெண்ணோடு கண்ணாடிக் களவாடிக்
           கனவாடிக் காம மாடிக்
     காசில்லா நிலையோடக் கருத்தில்லாக் கருத்தோடு
            கயமையாற் கபட மாடித்
துள்ளிவிளை யாடிப்பயன் துய்த்தாடி விளைவாகத்
           தோன்றுங்கரு உருவோ டாடித்
     துயராடித் துன்பத்தில் துணையாடித் தேய்ந்தாடித்
           துளைபாண்டந் துவண்டு வாடி
உள்ளவுயிர் இல்லையதிவ் உடல்விட்டுப் போகுமெனும்
           உண்மையறிந் துயிரு மாட
     உள்ளாட்டி உலகெல்லாம் உறைந்தாட்டும் நீயாள
           உணர்வாடப் பாடி னேனே!

தேனரிய தீந்தமிழைச் சுவைப்போர்கள் பிறமொழியின்
           தேயொலிமோ கங்கொள் வாரோ?
    தெள்ளருஞ் சுனையுள்ள தண்ணீரை விட்டெவருந்
           திரைகடலில் தாகந் தீர்ப்பாரோ?
வானல்கும் வற்றாத ஒளியிருக்க மின்மினியின்
           வற்றுமொளி வேண்டியிரப் பாரோ?
     வளம்வாழும் நதிபாயும் நிலம்விட்டு விதைநெல்லை
           வறழ்பாலை தோண்டியிடு வாரோ?
ஊனழித்திவ் வுயிர்வாழ உற்றவழி கண்டோர்கள்
           உலகின்பம் இன்பமென் பாரோ?
      உயர்மலையில் வீடுகொண்டோர் வரும்வெள்ளத்தால்
           உறுப்பழியுந் துன்பமென் பாரோ?
நானென்னும் அகப்பேயை நான்கொன்று வாழுமொரு
           நல்வினையான் என்று’அடை வேனோ?
      நலமொன்றும் அறியாத நாயனாய்ப் பிறந்திறக்கும்
             நலிவினையான் கொன்றுவிடு வேனோ?
              -பதினான்குசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
( 13-08-1996 கல்லூரி இளங்கலை முதலாமாண்டு. விரிவுரையாளரால் வகுப்பின் புறத்திருக்கப் பணிக்கப்பட்ட போழுதிற் பதிவு.)

     

Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

16 comments:

  1. வணக்கம் ஐயா
    எவ்வளவு ஆழமான பொருள் கொண்ட கவிதை. மெய்யெல்லாம் பொய்யாகி, பொய்யெல்லாம் மெய்யாகும் மாயை உருவாக்கும் உலகம் இது. இந்த வயதில் இப்படியொரு ஞானம் வியக்க வைக்கிறது. தொடருங்கள். தங்களின் எழுத்துகளும் எண்ணங்களும் என்னைப் போன்றோர்க்கு உதவட்டும். பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. எல்லாப் புகழும் “ உங்களுக்கே“
      நன்றி!

      Delete
  2. விருப்பற்ற வாழ்விற்குத் திருப்பெற்றேன் இல்லைநான்
    விட்டகலா தண்டுந் தாகம்,
    வெறுப்புற்று மெய்ஞான வழிதேடிக் காணாமல்
    வேதனை கொண்டு சாகும்!
    ஆகா.. என்ன நடை? என்ன கருத்து? அருமை அய்யா!, உள்ளடக்கத்தில் கண்ணதாசனையும், உருவத்தில் பற்பல பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில வரும் பதினான்குசீர்க் கழிநெடிலடி ஓசையையும் கொண்டு மிரட்டுகிறீர்கள் இவ்வளவு சிறப்பான கவிஞரே, எங்கே இருந்தீர் இத்தனைநாள் என்று தமிழ்உலகம் கேட்கும்.எழுதுங்க்ள்..தொடர்ந்து எழுதுங்கள்..நன்றி வணக்கம். (கிட்டத்தட்ட (?) இதே நடையில் நான் எழுதிய மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ் அம்புலிப்பருவப் பா ஒன்று பார்க்க - http://valarumkavithai.blogspot.com/2013/08/blog-post_24.html

    ReplyDelete
    Replies
    1. அருந்தமிழ்ச் சான்றீர்,
      மரபில் உங்களின் மயக்கும் நடை கண்டேன்!
      இலக்கணப் புலமையை ஏற்கனவே அறிவேன்.
      இயற்றமிழ் வல்லமை யாவரும் அறிவர்.
      மறைமலை அடிகள் பிள்ளைத் தமிழும் அதன் கருத்தொன்றிற்குத் தங்களின் பதிலும் என்னைப் பெரிதும் கவர்ந்தன.
      நன்றி.

      Delete
  3. Replies
    1. மதிவாணன் ஐயாவிடத்திலிருந்து உங்களைக் குறித்தறிந்தேன்.
      கருத்திட்டமைக்கு நன்றி.

      Delete
  4. அருமையான படைப்பு...
    நான் மீண்டும் மீண்டும் வசித்து விவாதித்து மீண்டும் கருத்திடுகிறேன். ..
    மேலும்
    நீங்கள் புதுகை பயிற்சிப் பட்டறையில்த்தான் வலைப்பூவை ஆரம்பித்ததாக நினைவு..
    உங்கள் ஒரு வலைப் பூவிர்க்காவே இன்னொரு பட்டறையை நடத்தலாம்.
    தொடருங்கள் ஜோ ...
    சிகரங்கள் உங்களுக்காக காத்திருகின்றன..

    ReplyDelete
  5. ஐயா,
    வணக்கமும் நன்றியும். உங்கள் நினைவு சரியேதான். என்னால் உங்களை மறக்கவே முடியாது. ஏனெனில் 17-05-2014 அன்றிந்த வலைப்பூவைத் தொடங்கி தமிழ் தட்டச்சிற்கான எழுத்துரு அக்கணினியில் இல்லாமையால் ஆங்கிலத்தில் முதல் பதிவை பதிவேற்றம் செய்தபோது முதன்முதல் கருத்திட்டது தாங்கள் தான்.
    பின்னர் அப்பதிவையும் தங்கள் கருத்தையும் அழித்தேனெனினும் தங்கள் பெயரை என்னால் மறக்க இயலாது.

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரரே!
    ஆஹா எங்கே இருந்தீர்கள் கவிஞரே இதுவரை. தங்கள் கவிதையை புரிந்து கொள்ளும் அளவுக்கு கூட எனக்கு ஆற்றல் போதாது இருந்தாலும் தங்கள் ஆற்றல் எனை கண்களில் நீர் மல்க வியக்கவும் மெய் சிலிர்க்கவும் வைத்தது. தொடருங்கள் தொடர்கிறேன். பாராட்டவும் வாழ்த்தவும். வார்த்தைகளும் இல்லை ஆற்றலும் இல்லை எனினும் வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு. புவி மீது கவியோடு.....!

    ReplyDelete
    Replies
    1. அன்புச் சகோதரி,
      உங்கள் அன்பினுக்கு நன்றிகள் .

      Delete
  7. அருமை. வார்த்தைகள் இலக்கியத் தரமாய் வந்து விழுகின்றன..வள்ளலார், தாயுமானவர் போன்றோரின் பாடல்களைப் போல நிறைய செய்திகளை உள்ளடக்கியதாய் இருக்கின்றன தங்கள் கவிதைகள். அருமை. வாழ்த்துக்கள் நன்றி http://arutkavi.blogspot.in/2011/04/blog-post_22.html

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அண்ணா!!

      Delete
  8. நானும் பதினான்கு சீர் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் நிறைய எழுதி இருக்கிறேன்- அதன் பா-வகை இதென்று அறியாமலேயே.இதனையும் பார்க்க நேரமிருப்பின்.நன்றி
    http://arutkavi.blogspot.in/2011/04/blog-post_22.html

    ReplyDelete
    Replies
    1. பார்த்தேன் அண்ணா கருத்திட்டிருகிறேன் தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா!

      Delete
  9. வகுப்பின் வெளிநிற்கும் வருத்தமா? வெண்பா
    விருப்பமாய் பாடிவ டித்திட்ட - விருத்தம்
    கண்டு நானும் வாழ்த்த, வார்த்தை
    காணவில்லை எனக்கு தான்
    நன்றி.

    ReplyDelete
  10. வணக்கம்!

    நானென்னும் பேயொழிய நாட்டிய பாப்படித்தேன்!
    தேனென்னும் செந்தமிழை நான்குடித்தேன்! - வானென்னும்
    வண்ணத்தில் நீள்கின்ற எண்ணத்தை ஆய்ந்தேன்!என்
    பண்ணகத்தில் பாட்டைப் பதித்து!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete